சதுரகிரியில் நாளை நவராத்திரி விழா : மலைப்பாதை திறப்பில் தொடரும் அலட்சியம்
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நாளை ( செப். 21)நவராத்திரி திருவிழா துவங்க உள்ள நிலையில் மலைப்பாதையை திறந்து விடுவதில் அலட்சியம் காட்டிய வனத்துறையினர், இறுதியாக கலக்டர் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்து பிரச்னையிலிருந்து ஒதுங்கி கொண்டனர். இதனால் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுபவர்களா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் நாளை துவங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆனந்தவல்லியம்மன் தினமும்் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இறுதி நாளில் அம்மன் மகிசாசுரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி மகிசாசுர அரக்கனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு அம்மன் உருவம் கலைக்கப்பட்டு விடும். விழா நாட்களில் மட்டும்தான் அம்மன் உருவமாக எழுந்தருளியிருப்பார். மற்ற நாட்களில் வெறும் பீடத்திற்கு மட்டுமே வழிபாடு செய்யப்படும்.
இழுத்தடிப்பு : திருவிழா நாட்களில் உருவமாய் இருக்கும் அம்மனை காண தமிழகம் முழுவதிருந்தும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்து வழிபடுவர். ஆனால் இவ்விழா குறித்து வனத்துறையினருக்கு தெரிந்தும் மலைப்பாதை திறக்கப்படும் தேதியை நேற்று வரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். மதுரை கலக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மழுப்பலாக பதிலையே தெரிவித்து வருகின்றனர். நேற்று வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மதுரை கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்தால்தான் மலைப்பாதையை திறக்க முடியும், என, தங்களது பொறுப்புகளை கலெக்டர் தலையில் சுமத்தி விட்டு முற்றிலுமாக நழுவிக்கொண்டனர். நாளை காப்புக்கட்டிக்கொள்ள மலைக்கு சென்றால் உள்ளே செல்ல வனத்துறையினர் அனுமதிப்பார்களா, நுழைவுவாயிலிலேயே விரட்டி விடுவார்களா என்ற குழப்பத்தின் உச்சியில் உள்ளனர் பக்தர்கள்.
மவுனமான வனத்துறை : பக்தர்கள் கூறுகையில், திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மலைப்பாதையை திறந்து விடுவதற்கு சாத்தியம் இல்லை என்றால், திறக்க உத்தேசித்துள்ள நாட்களையாவது வெளியிடலாம். திறப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றாலும் அதையாவது தெரிவிக்கலாமே. ஒன்றுமே சொல்லாமல் கடைசிநாள்வரை மவுனமாக வனத்துறையினர் இருப்பது வேதனையாக உள்ளது. உடனடியாக இதில் மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.