உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால், 14 கி.மீ., தூரம் கிரிவலப்பாதையில் நடந்து சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்களிடம், பணம், நகை பறிப்பு, மயக்க பொடி தூவி கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற செயல்கள் நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, 68 கோடி ரூபாய் மதிப்பில் கிரிவலப்பாதை விரிவாக்க பணி நடக்கிறது. இதில் ஒரு பகுதியாக, கிரிவலப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இவை, திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம் மற்றும் கோவிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். ஏற்கனவே, மாட வீதியில், 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !