பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா காப்புகட்டுதலுடன் துவக்கம்
பழநி: பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா இன்று (செப்.,21ல்) காப்புக் கட்டுதலுடன் துவங்கி 30 வரை நடக்கிறது. நாள்தோறும் பக்தி சொற்பொழிவுகள், நடனநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் பகல் 12 மணி உச்சிக்காலபூஜை வேளையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்புகட்டுதல் நடைபெற்றது.
போகர் ஜீவசமாதி சன்னதியில் காப்பு கட்டப்பட்டு, புவனேஸ்வரி அம்மனை புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு கொண்டு வருவர். பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு செப்.21 முதல் 30 வரை தினசரி மாலை 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெறும். கோதைமங்கலத்தில் செப்.30ல் விஜயதசமி அன்று அம்பு, வில் போட்டு சூரன்வதம் நடக்கிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9மணிவரை பக்திசொற்பொழிவுகள், பரதநாட்டியம், கிராமியநடனம், பக்தி இன்னிசை, வீணை வாசிப்பு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.