உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரம்பரிய மைசூரு தசரா! 407வது ஆண்டு கொண்டாட்டம் : சாமுண்டீஸ்வரி வெற்றிக்கு கவுரவம்

பாரம்பரிய மைசூரு தசரா! 407வது ஆண்டு கொண்டாட்டம் : சாமுண்டீஸ்வரி வெற்றிக்கு கவுரவம்

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழா, இம்மாதம், 21 ம் தேதி மழை சாரலுடன் துவங்கியது. 30ம் தேதி, ஜம்பு சவாரியுடன் நிறைவு பெறுகிறது. ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும் இத்திருவிழாவுக்கு, சரண ராத்திரி என்ற பெயரும் உண்டு. விஜயநகர மன்னர் காலத்தில் துவங்கப்பட்ட தசரா திருவிழாவுக்கு, 400 ஆண்டுக்கும் அதிகமான வரலாறு உண்டு. வெற்றியின் அடையாளமாக, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துஷ்ட சக்தியை வதம் செய்து, நல்லவர்களை பாதுகாப்பதே, இதன் நோக்கம்.

யதுவீருக்கு இரண்டாவது தசரா : மன்னர் காலத்தில், நடந்தது போன்றே, தற்போதும் மைசூரு அரண்மனையில், தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மறைந்த பின், அவரது தத்து பிள்ளையாக, யதுவீர், இரண்டாவது ஆண்டாக, தசரா விழாவில் பங்கேற்கிறார். நேற்று முன்தினம், மகாராஜாக்கள் அணியும் ராஜ உடையில் கம்பீரமாக, தாய் பிரமோதா தேவி, மனைவி திரிஷிகா குமாரியுடன் போட்டோ எடுத்து கொண்டார். திரிஷிகா, யதுவீருக்கு பாத பூஜை செய்தார்.

கோலமிட்டு பெண்கள் அசத்தல் :
தசராவுக்காக நடத்தப்பட்ட கோலப்போட்டியில், மைசூரு, துமகூரு, நஞ்சன்கூடு, நெலமங்களா, சாம்ராஜா நகர் உட்பட பல பகுதிகளிலிருந்து, 85க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில், முக்கியமாக,மைசூரு தேவராஜ் ெமாஹல்லாவை சேர்ந்த, 80 வயது மூதாட்டியும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மல்லுக்கட்டிய வீரர்கள் : எதிராளியை அசைய விடாமல், தனது பலத்தால் அமுக்கிய வீரர்கள் பலர் காணப்பட்டனர். இந்த போட்டியின் போது, விசில் சத்தம் விண்ணை பிளந்தது.

ஸ்ரீ ரங்கபட்டணா :
மாண்டியா மாவட்டம், ஸ்ரீ ரங்கப்பட்டணத்தில், 1610ல், ராஜ உடையார், தசரா விழாவை துவக்கினார். 150 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. அதன் பின், மைசூருக்கு இடம் மாற்றப்பட்டது. அதன் பின், ஸ்ரீரங்கபட்டணாவில் தசரா வைபோகத்தை காண முடியவில்லை. கடந்த, 2007ல் மாவட்ட நிர்வாகம், மீண்டும் தசரா விழாவை நடத்தியது. அன்றிலிருந்து, ஆண்டுதோறும், மைசூரு போன்று கொண்டாடப்படுகிறது. வறட்சியால், இரண்டு ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை. இம்முறை பரவலாக நல்ல மழை பெய்து, வறட்சி சாயல் மறைந்ததால், மீண்டும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. முதல் நாளன்றே, ஜம்பு சவாரி நடக்கும்.

ஐதீகங்கள் கடைபிடிப்பு : தசரா உற்சவம், பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயப்படி நடப்பதில்லை என கூற முடியாது. அன்றைய காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து ஐதீகங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, ஆராதனை, ஆன்மிக விதிகள் அனைத்தும், எந்த தவறுகளும் இன்றி நடத்தப்படுகின்றன. ஆனால், மன்னர் குடும்பத்தின் சாயல் இருப்பதில்லை.

நுழைய தடை : தசரா தொடர்பாக, பணிகள் நடந்து வருவதால், இம்மாதம், 29ம் தேதி ஆயுத பூஜை, 30ம் தேதி விஜயதசமி, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை, அரண்மனைக்குள் பொது மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கோலாகலம் : சிருங்கேரி, கொல்லுார், பனசங்கரி உட்பட, மாநிலத்தின் மற்ற திருத்தலங்களிலும், நவராத்திரி விழா துவங்கியது. மாண்டியா மேல்கோட்டை செலுவநாராயண சுவாமி கோவிலில், நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 29ம் தேதி, மஹாநவமி நடக்கும்.மறுநாளான, விஜயதசமி நாளில், பாரம்பரிய மகாராஜர் அலங்காரத்தில், செலுவநாராயண சுவாமி காட்சி தருவார். அன்று மாலை, ஜம்பு சவாரி, மகாலட்சுமி யதுகிரி நாயகி அம்மனின் சேஷ வாகன உற்சவம் நடக்கும்.

ஆரத்தி எடுத்து வெளிநாட்டினர் வரவேற்பு :
உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணியர் நகரில் குவிந்து வருகின்றனர். நகருக்கு வந்த வெளிநாட்டு பயணியருக்கு, மைசூரு அறக்கட்டளை ஒன்று மாலை, மைசூரு தலைப்பாகை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து வரவேற்றது. இதை பார்த்த வெளிநாட்டினர் ஆச்சரியப்பட்டனர். சென்னையிலிருந்து மைசூருக்கு விமானம் சுற்றிப்பார்க்க பஸ், ஜீப், சைக்கிள் தசரா விழாவையொட்டி, மைசூரு - சென்னை இடையிலான விமான சேவையை, விமான துறை இணை அமைச்சர், ஜெயந்த் சிம்ஹா, 20ம் தேதி மாலை, துவக்கி வைத்தார். சென்னையிலிருந்து மைசூரு வரை, சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி, மைசூருவை சுற்றிப்பார்க்க, வைபை, ஏசி வசதியுடன் பஸ், திறந்த ஜீப், சைக்கிள் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்தையும் விளக்குவதற்கு, வழிகாட்டியும் உள்ளார்.

மனசை பரவசப்படுத்தும் குப்பண்ணா பார்க் மலர் கண்காட்சி :
மூன்று லட்சம் ரோஜாக்களாலான சென்னகேசவா கோவில்மைசூரு நசர்பாத்திலுள்ள குப்பண்ணா பூங்காவில், தோட்டக்கலை துறை சார்பில், மலர் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. புகழ் பெற்ற சுற்றுலா இடங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்ணை கவர்கிறது. டி.நரசிபுரா தாலுகா, சோமநாதபுரத்திலுள்ள பழமை வாய்ந்த இடமான சென்னகேசவா கோவில் இடம் பெற்றுள்ளது. இந்த கோவில், 18 அடி உயரம், 16 அடி நீளத்தில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மூன்று லட்சம் ரோஜா பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 2.15 லட்சம் மலர்களால், மயில், பெரிய, குட்டி யானைகள், பாரிஸ் ஈபிள் டவர், 17 அடி உயர மணித்துாண், புத்தர், அம்பேத்கர் உருவ சிலைகள், மலர்களால் கண்ணை கவருகின்றன.

ஜம்பு சவாரி : தசராவின் நிறைவு நாளன்று நடக்கும் ஜம்பு சவாரி, உலக பிரசித்தி பெற்றது. இதை காண்பதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணியர், மைசூரு வருவது வழக்கம். மைசூரு சமஸ்தானத்தில் யது வம்சத்தினர் ஆட்சி நடந்த காலத்தில், தசரா வைபோகம், மிகவும் ஜோராக நடந்தது. வெவ்வேறு விதமான விளையாட்டு போட்டிகள், மைசூரு மன்னரின் ஜம்பு சவாரி போன்றவை, மக்களை வெகுவாக ஈர்த்தன.

தொடரும் தனியார் தர்பார் : மன்னரை பார்ப்பதற்காகவே, கூட்டம் கூட்டமாக, மைசூரின் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்துக்கு மக்கள் வருவர். மன்னரை நேரில் தரிசித்து, தனியார் தர்பார் நிகழ்ச்சிகளை கண்டு ஆனந்தம் கொள்வர். தற்போதும், இந்த தர்பார் தொடர்கிறது. பிற சமஸ்தானங்களின் மன்னர்களும் கூட, தசரா உற்சவத்தை காண மைசூரு வருவர். மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, மக்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்த பின், தசரா கொண்டாட்டத்தின் வடிவம் மாறியுள்ளது. விருக் ஷ பூஜை, ஆடம்பர கொண்டாட்டங்கள் ஓரம் கட்டப்பட்டன. மக்கள் பிரதிநிதியான முதல்வரின் மேற்பார்வையில் நடக்கும் தசரா உற்சவத்தில், மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாநிலமே கொண்டாடி மகிழும் திருவிழாவாக இது அமைகிறது.

சிலை ஊர்வலம் :
மன்னர் காலத்தில் நடந்து வந்த தனியார் தர்பார், தற்போதும் நடக்கிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில், அம்பாரி மீது, மன்னரின் ஊர்வலம் நடக்காது. அதற்கு பதிலாக, புவனேஸ்வரியின் திருஉருவ சிலை சுமந்த அம்பாரி ஊர்வலம் நடக்கிறது.

சக்தி தேவிக்கு சிறப்பு : துஷ்ட சக்தியின் மொத்த உருவமாக இருந்த மகிஷாசுரனை வதம் செய்து, நல்லவர்களை வாழ வைத்த, சக்தி தேவியை சிறப்பிப்பதே, தசராவின் நோக்கம். இன்றைய தினத்தில், மாநிலத்திலுள்ள ஏழ்மை, அஞ்ஞானம், வேலையில்லா திண்டாட்டம், உடல் நிலை பாதிப்பு என பல பிரச்னைகளும் நீங்கி, மக்களை சுபிட்சமாகவும், நிம்மதியாகவும், வாழ வைக்க வேண்டும் என்று சக்தி தேவியின் அம்சமான, சாமுண்டீஸ்வரி தேவியிடம் முறையிடுவர். தசரா திருவிழாவில் கவியரங்கம், இசை நிகழ்ச்சி, கிராம கலை நிகழ்ச்சிகள், தனியார் தர்பார், பொருட்காட்சி, திரைப்பட விழா, மலர் கண்காட்சி, உணவு மேளா உட்பட, பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !