பவானி காவிரி மகா புஷ்கரம் : பிரதமர் வாழ்த்து
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் நடக்கும், காவிரி மகா புஷ்கர விழாவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எங்கள் பவானி பவுண்டேஷன், அகில இந்திய துறவியர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில், காவிரி மகா புஷ்கர விழா நடக்கிறது; நாளையுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி புனித நீராடிய பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தடியில் உள் துர்கையம்மனை மஞ்சள், மலர்கள் துாவி வழிபட்டனர்.
இந்நிலையில், விழா சிறக்க, பிரதமர் மோடி, தன் கையொப்பமிட்ட வாழ்த்து மடலை அனுப்பியுள்ளதாக, விழாக்குழு தலைவர், செந்தில் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: விழாவில் பங்கேற்க, பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். பல்வேறு நிகழ்ச்சிகளால், அவரால் பங்கேற்க முடியவில்லை. காவிரி புஷ்கர விழா சிறக்கவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மக்கள் முயற்சிக்க வேண்டும் என, கையெழுத்திட்டு, பிரதமர் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.