திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் லட்ச தீப விழா!
திருவள்ளூர்:குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் நடந்த லட்ச தீப விழாவில், பக்தர்கள் ஏற்றிய விளக்கொளியில் கோவில் மற்றும் குளம் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.சென்னை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே உள்ளது, திருமழிசை குளிர்ந்தநாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத மூன்றாவது சோம வாரத்தில், லட்ச தீப விழா நடைபெறுவது வழக்கம். 13ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா நேற்று மாலை நடந்தது.விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும், 9 மணிக்கு, 108 சங்காபிஷேகமும் நடந்தது. மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றி, உற்சவரை வழிபட்டனர். விளக்குகள் ஏற்றப்பட்ட பிறகு, கோவில் மற்றும் திருக்குளம் முழுவதும் விளக்கொலியால் ஜொலித்தது. இரவு 7 மணிக்கு, பக்தி இன்னிசை நடந்தது.தொடர்ந்து, இரவு 9 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் பூந்தமல்லி, சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் டி.எஸ்.பி., பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, திருமழிசை செங்குந்த மரபினர் செய்திருந்தனர்.