பெரியாறு அணை விவகாரம்: கேரளா செல்லாமல் எல்லையிலே மாலை கழற்றிய ஐயப்ப பக்தர்கள்!
கூடலூர்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே எவ்வித முன்னேற்ற பேச்சும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் எல்லை பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக இந்த அணை விவகாரம் சற்று துளிர் விட்டு இரு மாநிலங்கள் இடையே கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. புதிய அணை கட்டுவோம் என்று கேர அரசும், விட மாட்டோம் என தமிழக அரசும் இழுத்து கொண்டு நிற்க மத்திய அரசினால் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த பிரச்னை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள அதிகார குழுவினர் ஒரு முடிவுக்கு வந்தால் தான் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த கூட்டம் மீண்டும் அடுத்த மாதம் கூடுகிறது.
2 வது நாளாக கடைகள் அடைப்பு : இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டத்தில் கடும் டென்ஷன் தொற்றிக்கொண்டுள்ளது. . கம்பம், குமுளி, கூடலூர், லோயர் கேம்ப் பகுதியில் கடைகள் தொடர்ந்து இன்றும் 2 வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் பலர் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர். இவர்கள் தற்போது குமுளி வழியாக செல்ல முடியவில்லை. கேரள மக்கள் அவ்வப்போது சிறு, சிறு வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது குமுளி வழியாக தேனிக்கு வரும் பக்தர்கள் வழக்கம் போல் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் குமுளி வழியாக செல்ல வேண்டாம் என பக்தர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதனால் மாற்று வழியில் ஐயப்ப பக்தர்கள் திருப்பி விடப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் பலரும் மதுரையில் இருந்து பிரிந்து செங்கோட்டை வழியாக செல்கின்றனர். தேனிக்கு வந்த பக்தர்கள் போடிமெட்டு வழியாக செல்கின்றனர். இது பயண நேரம் அதிகமாவதால் காலதாமதம் ஆகும். நோன்பு இருந்து ஐயப்பனை தரிசிக்க வரும் நேரத்தில் இப்படி இடையூறு ஏற்பட்டதால் பக்தர்கள் பலரும் பெரும் வேதனைப்பட்டனர். இதனால் நாம் ஐயப்பனை தரிசிக்க முடியாதே என்று சுருளி அருவியில் குளித்து விட்டு அங்கேயே ஐயப்பன் போட்டோவை வைத்து மாலையை கழற்றி விரதத்தை முடித்து வருகின்றனர். இன்னும் செல்ல முடியாதா என பல ஐயப்ப பக்தர்கள் மண்டபம் மற்றும் கோயில்களில் தங்கி இருக்கின்றனர். இனிமேல் கேரளாவில் உள்ள ஐயப்ப கோயிலுக்கு செல்ல வேண்டாம் சென்னையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கே சென்று விடலாம் என சில பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
நடந்து சென்ற பக்தர்களும் தடுத்து நிறுத்தம் : ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பலரும் கூடலூரில் நிறுத்தப்பட்டனர் . நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குறான் அவனுங்க கோயிலுக்கு ஏன் போறீங்க இப்படி செல்ல வேண்டாம் என இப்பகுதி தமிழக மக்கள் மறித்தனர். இதனால் பக்தர்கள் பலரும் தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பி வருகின்றனர்.