பழநியில் மூச்சு முட்டும் ஆக்கிரமிப்பு பக்தர்களிடம் பகல் கொள்ளை!
பழநி : மூச்சு முட்டும் ஆக்கிரமிப்பு, முகமூடி அணியாத "சீட்டிங் கும்பல் நடத்தும் கொள்ளைகளால், பழநிக்கு வரும் பக்தர்கள் மனம் வெம்புகின்றனர். பழநியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நான்கு கிரிவீதி, சன்னதி வீதிகளில், பேன்சி, பூஜை பொருள் கடைகள், ஓட்டல் என, ஆக்கிரமிப்புகளுக்கு அளவு இல்லை. இதில் 20 முதல் 30 அடி தூரத்திற்கு ஆக்கிரமித்து கடை விரித்துள்ளனர். பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை தேடி கண்டுபிடிக்க வேண்டும். தண்டபாணி நிலையம், கோயில் அலுவலகம், சரவணப்பொய்கை, பாதவிநாயகர் கோயில் மட்டுமின்றி, அடிவாரம் போலீஸ் ஸ்டேஷன் நுழைவாயிலும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் அவலம்: புது பஸ் ஸ்டாண்டில் 32; பழையதில் 25 பஸ்கள் நிறுத்தலாம். ஆனால் பூ, பழ தட்டு வியாபாரிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை பாதையில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். பயணிகள் ஓய்வு எடுக்கும் இடங்கள், பிளாட்பாரம் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. பஸ் நிற்கும் பகுதியில் அசுத்தமாக இருப்பதால், பயணிகள் மூக்கைப் பிடித்தபடி காத்திருக்கின்றனர். தரம் குறைந்த உணவுப் பொருட்கள், அதிக விலையில் விற்கப்படுகின்றன. பூ, பழம், பலகாரம் விற்போர், பிச்சை எடுப்போரிடம் இருந்து, பயணிகள் மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்ற நிலை. திருட்டு, வழிப்பறிக்கும் பஞ்சம் இல்லை.
கிரிவீதி துயரம்: கோயில் சார்பில், வாகன நிறுத்தத்திற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தளம் சீரமைப்பு பணி இழுபறியால், வாகனங்கள் கிரிவீதிகளில் நிறுத்தப்படுகின்றன. மார்க்கெட் ரோடு, பெரிய கடைவீதி, ஆர்.எப்.ரோடு, புது தாராபுரம் ரோடு, திருவள்ளுவர் ரோடு, திண்டுக்கல் ரோடு, சன்னதிவீதி, வையாபுரி கண்மாய் ரோடுகளில் ஆக்கிரமிப்பு நெரிசல், விபத்துகளுக்கு அளவே இல்லை.
இதுகுறித்து பக்தர்கள் கூறுவது என்ன? மாதேஸ், ஈரோடு: பஸ் ஸ்டாண்டில் பக்தர்களை மடக்கி, சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, பணம் பறிக்கின்றனர். இலவச காலணி பாதுகாப்பு இடம் என, அழைத்து, தேங்காய் பழ தட்டுக்கு 200 ரூபாய் வரை மிரட்டி வசூலிக்கின்றனர்.
பெங்களூரு சுற்றுலா வாகன டிரைவர் ஜெகதீஸ்: கார், வேன், லாரி, பஸ்கள் அடிவாரம் வரை அனுமதிக்கப்படுகின்றன. "டோல்கேட் ல், போலி ரசீது மூலம் கூடுதலாக வசூலிக்கின்றனர். இங்கு பணியில் இருக்கும் போலீசாருக்கு தனியாக கொடுக்க வேண்டும். அடாவடி வசூலால், பக்தர்கள் மனம் வெம்புகின்றனர். இங்கு கட்டுப்பாடு இன்றி நடக்கும் பகல் கொள்ளைகளை தடுக்க வேண்டும். கிரிவலம், சன்னதி பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோயில், நகராட்சியினரின் ஒத்துழைப்புடன், கலெக்டர் நாகராஜன், ஜெயச்சந்திரன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.