தெரசன்னை திருவிழா கோலாகலம்: வண்ணமயமான ஆலயம்
ஊட்டி : ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள புனித தெரசன்னை ஆலயத்தின், 51வது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில், புனித தெரசன்னை ஆலயத்தின், 51வது ஆண்டுவிழா, கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மாலை சிறப்பு நவநாள் மறையுரை திருப்பலி நடந்தது. திருவிழா நாளான, 8ம் தேதி பிங்கர்போஸ்ட் சந்திப்பில் இருந்து, புனித சூசையப்பர் பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய பேரணி, ஆலயம் வரை நடந்தது. பின்பு, முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், பங்கு தந்தை பெனடிக்ட , புனித சூசையப்பர் பள்ளி தாளாளர் பெலவேந்திரம் ,புனித தெரசன்னை பள்ளி தாளாளர் அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. மாலை, பிங்கர் போஸ்ட் முதல் காந்தள் வரையில் சிறப்பு பவனி நடந்தது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர். பங்கு தந்தை பெனடிக்ட் கூறுகையில்,இந்த ஆலயம் துவங்கி, 51 ஆண்டுகள் ஆன நிலையில், 51வது ஆண்டுவிழாவை அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக கொண்டாடினோம். வரும் நாட்களில் அதிகளவில் சேவை பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம், என்றார்.