கடற்கரை கோவிலை சுற்றி மாமல்லபுரத்தில் சவுக்கு மரம்
மாமல்லபுரம்: கடற்காற்று அரிப்பிலிருந்து, கடற்கரை கோவிலை பாதுகாக்க, சவுக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. பல்லவ சிற்பங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரத்தில், கடற்கரை கற்கோவில் குறிப்பிடத்தக்கது. கி.பி., 7ம் நுாற்றாண்டில், இக்கோவில் அமை க்கப்பட்டது. கோவிலை , சர்வதேச பாரம்பரிய நினைவுச்சின்னமாக, ஐ.நா., சபையின் கலாச்சார கழகம் அங்கீகரித்துள்ளது. இக்கோவில், கடலால் பாதிக்கப்படலாம் என கருதி, 30 ஆண்டுகளுக்கு முன், பாறை கற்கள் குவிக்கப்பட்டு, தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. இது ஒரு புறமிருக்க, கடலின் உப்புக்காற்றால், கோவில் படிப்படியாக அரிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பை தவிர்க்க, தொல்லியல் ரசாயன பிரிவினர், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சாயனம் கலந்த காகிதக்கூழை, கோவிலில் பதித்து, உப்பு, மாசு உள்ளிட்டவற்றை அகற்றுகின்றனர். கடற்காற்றால் அரிக்கப்படுவதை தவிர்க்க, கோவிலை சுற்றிலும், சவுக்கு மரங்களும் வளர்க்கப்படுகின்றன. கடற்காற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தி, அதன் உப்புத்தன்மை கோவில் வரைபரவுவதை, சவுக்கு தடுக்கக்கூடியது என்பதால், வளாகத்தில் மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்படுகின்றன.