உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் நடந்தே சென்று கைசிக புராணம் வாசித்த பட்டர்!

ஸ்ரீரங்கத்தில் நடந்தே சென்று கைசிக புராணம் வாசித்த பட்டர்!

திருச்சி : ஸ்ரீரங்கத்தில், பிரம்ம ரத பல்லக்கு மரியாதை வழங்கப்படாத கைசிக புராணம் வாசித்த பட்டர், நடந்தே சென்று, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிரம்ம ரத மரியாதை என்றால் என்ன? : ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், கைசிக ஏகாதசி நாளில், கைசிக புராணம் வாசிப்பவருக்கும், அத்தியாயன ராப்பத்து உற்சவம் சாற்றுமுறை நாளில், வேத பாராயணம் வாசிப்பவருக்கும், நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் சேவை சாதிக்கும் நேரத்தில், பிரபந்தங்களை தாள இசையுடன் சேவித்தல், அத்தியாயன உற்சவத்தில் அறையர் சுவாமிகள் அவரவர் குடும்ப விகிதாச்சார முறைப்படி அவர்களுக்கு பெருமாள் மாலை மாற்றி, கோவிலில் இருந்து எட்டு பேர் பல்லக்கில் வீட்டுக்கு தூக்கிச் செல்லும் பிரம்ம ரத மரியாதை, அந்தந்த கைங்கர்ய நிறைவு நாளில் நடப்பது வழக்கமாக இருந்தது.

பிரச்னை தீர்ந்தது : இந்நிலையில், 2010 செப்., 27ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், "பிரம்ம ரத மரியாதையை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், கைசிக புராணம் வாசித்த பட்டர், நடந்தே வீட்டுக்குச் சென்று இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதேபோல, நேற்று நடந்த கைசிக ஏகாதசி விழாவில் பராசர லட்சுமி நரசிம்மன் பட்டர், கைசிக புராணம் வாசித்தார். அவருக்கு, நம்பெருமாள் கற்பூர படியேற்று சேவை முடிந்தவுடன், கோவில் மரியாதைகள் வழங்கப்பட்டன. மரியாதைகளை ஏற்றுக் கொண்டு, ஆரியபட்டாள் வாசல், ரங்கா ரங்கா கோபுரம் வழியாக உத்திர வீதிகளில் நடந்து வலம் வந்தார். பிரம்ம ரத மரியாதை வேண்டும் என, பல்லக்கு மரியாதை பெறுபவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதை எதிர்த்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்திருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பட்டர் ஊர்வலம் அமைதியாக நடந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் பரபரப்பு ஓய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !