குருவாயூர் கோயிலுக்குள் அனைவரும் செல்லலாம்: சபரிமலையில் அர்ச்சகராக அனைவருக்கும் உரிமை!
கேரளா : குருவாயூர் கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம் என்பது பற்றிய ஆலோசனை தீவிரமடைந்துள்ளது. சபரிமலையில் அனைத்து ஜாதியினரையும் மேல்சாந்தியாக நியமிப்பது பற்றி முடிவெடுக்க அமிக்கஸ்கியூரி (நீதிமன்றத்துக்கு உதவுபவர்) நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேவசம்போர்டில் பிற ஜாதியினர் பூஜாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா சமத்துவ மாநிலமாக மாறுவதாக கருதப்படுகிறது.குருவாயூர் கோயிலில் பிற மதத்தினருக்கு அனுமதி கிடையாது. பிரபல கர்நாடக இசை பாடகர் ஜேசுதாஸ், கோயிலுக்குள் செல்ல அனுமதி கோரி வாசலில் பிரார்த்தனை போராட்டம் நடத்தினார்.எனினும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் தற்போதைய கோயில் தந்திரி தினேஷ் நம்பூதிரிபாடு, இங்கு அனைவரையும் அனுமதிக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து இது தொடர்பான விவாதம் வலுபெற்றுள்ளது.மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் காங்கிரசின் ரமேஷ் சென்னித்தலா, பத்திரிகையாளர் வீரேந்திரகுமார் எம்.பி., போன்றவர்கள் வரவேற்று இது தொடர்பாக விவாதம் நடத்தி முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கலாம் என்பதுதான் இடது முன்னணி அரசின் நிலைபாடு என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். ஆனால் தந்திரி தினேஷ் நம்பூதிரிபாடின் நிலைபாடு அவரது தனிப்பட்ட முடிவு என்று குருவாயூர் கோயிலின் மூத்த தந்திரி நாராயணன் நம்பூதிரிபாடு தெரிவித்துள்ளார். அவரது முடிவை தந்திரி குடும்பம் ஏற்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் சபரிமலையில் மேல்சாந்திக்கு பிராமணர்களிடம் இருந்து மட்டும் மனு பெற்று நேர்முகத்தேர்வு நடத்தியதை எதிர்த்து கோட்டயம் மூலவட்டம் விஷ்ணுநாராயணன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அமிக்கஸ்கியூரியை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூஜாரி நியமனத்தில் ஜாதி, குலம் பெயரில் பாகுபாடு இருக்க கூடாது என்று 2002ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மேற்கோள்காட்டி, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டில் ஏற்கெனவே அனைத்து ஜாதியினரும் பூஜாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குருவாயூரில் அனைத்து மதத்தினருக்கும் அனுமதி, சபரிமலை பூஜாரியாக யாரும் வரலாம் என்ற நிலைப்பாடு செயலுக்கு வரும் போது கேரளா முன்னோடி சமத்துவ மாநிலமாகி விடும் என்று கருதப்படுகிறது.