பரமக்குடி முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
பரமக்குடி, பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 20 ல் காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சக்தி வேல் பெற்றுக்கொண்ட சுப்பிரமணிய சுவாமி நேற்று முன்தினம் மாலை மயில் வாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வந்தார். மாலை 6:30 மணிக்கு கோயில் முன் வைகை ஆற்றின் கரையோரம் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமிக்கு பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. பின்னர் தாலிக்கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
*பரமக்குடி பாரதிநகர் செல்வக்குமரன் கோயிலில் 32 ம் ஆண்டு கந்தசஷ்டி விழா அக். 20 ல் காப்புகட்டுடன் துவங்கியது. தினமும் மூலவர் தர்பார், வேடன், விருத்தன், அம்பாள், சண்முகர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு சூரனைவதம் செய்யும் நிகழ்ச்சியும், நேற்று மாலை 6:00 மணிக்கு தெய்வானையுடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.