சூரியனார்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: டிச.,21ல் சிறப்பு பரிகார ஹோமம்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார்கோவிலில் சனிப்பெயர்ச்சிவிழா சிறப்பு பரிகார ஹோமம், வழிபாடு வரும் 21ம் தேதி நடக்கிறது.கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கென அமையப்பெற்ற ஒரே கோவிலாக விளங்கும் சூரியபெருமான் இரு மனைவியருடன் மூலவராக அமைந்துள்ளார்.சூரியனுக்கு எதிரில் குருபகவான் காட்சியளிக்கிறார். மற்ற கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அவரவர்க்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றனர். சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் கிரகங்களின் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.வருகிற 21ம் தேதி காலை 7.50 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. முன்னதாக சிறப்பு ஹோமங்கள் ஆலய சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெறுகிறது.சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமத்தில் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்குபெறுவதால் நற்பலன்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.