திருமலாபுரம் குடவரைக் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா
சேர்ந்தமரம் : திருமலாபுரம் குடவரைக் கோயிலில் நடந்த கார்த்திகை தீப விழாவில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகில் உள்ள திருமலாபுரம் குடவரைக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. குடவரைக்கோயில் மூலவர் பசுபதேஸ்வரருக்கு அபிஷேகங்களும், சிறப்பு பூஜையும் நடந்தது. மதியம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட கிரிவலம் நடந்தது. தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குற்றாலம் விவேகானந்த ஆசிரம சுவாமி அகிலானந்தா, குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தா, அன்னபூர்ண மடம் சுவாமி ராகவானந்தா, விஸ்வ இந்து பரிசத் மாநில அமைப்பு செயலாளர் பி.எம். நாகராஜன், திருவனந்தபுரம் நாரயணகுரு சுவாமிகள் மற்றும் சேர்ந்தமரம், திருமலாபுரம், கரடிகுளம், வலசை, கம்பனேரி, கள்ளம்புளி, வேலப்பநாடாரூர், தன்னூத்து ஆகிய ஊர் முக்கிய பிரமுகர்கள், நாட்டாண்மைகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருமலாபுரம் குடவரைக் கோயில் கார்த்திகை கமிட்டியினர் செய்திருந்தனர். சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.