காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களுக்கு உணவு வழங்க நிர்வாகம் அனுமதி அவசியம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்திற்குள், பக்தர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க விரும்புவோர், அனுமதி பெற வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்களில் சிலர், தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால், புளியோதரை, பொங்கல், சாம்பார், தயிர் சாதம், நீர்மோர், தண்ணீர் பாக்கெட், இனிப்பு வகைகளை, வெளியே தயார் செய்து, கோவில் வளாகத்திற்குள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொருட்கள், கோவில் நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புதுறையின் கண்காணிப்பில் தயாரிக்கப்படுவதில்லை. இதனால், உணவுப்பொருட்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து அறிய முடியவில்லை. எனவே, கோவிலுக்குள் உணவுப்பொருட்களை வழங்க விரும்புவோர், கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.