உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசியில் 16ம் தேதி அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு வரவேற்பு!

தென்காசியில் 16ம் தேதி அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு வரவேற்பு!

தென்காசி : தென்காசியில் வரும் 16ம் தேதி அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவ திருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவின் போது ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். ஐயப்பனுக்கு பயன்படுத்தப்படும் திருஆபரணங்கள் கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உற்சவ திருவிழாவிற்காக ஆண்டுதோறும் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து அச்சன்கோவிலுக்கு திருஆபரணப் பெட்டி எடுத்து செல்லப்படும்.

திருஆபரணங்களில் 18 இஞ்ச் நீளம் உடைய தங்க வாள் உள்ளது. இந்த வாள் முன் காலத்தில் தேவர்கள் செய்த பூஜையில் வைக்கப்பட்டதாகவும், காந்தமலையில் இந்த வாளை பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கண்டெடுத்து கோயிலில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வாளில் காந்தமலை என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வாள் இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் எடை மாறக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சன்கோவில் ஐயப்பன் கோயில் உற்சவ திருவிழாவில் தேரோட்டம் நடக்கும் போது தேருக்கு முன்னர் தங்க வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஆண்டு வரும் 17ம் தேதி அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு திருஆபரணப் பெட்டி வரும் 16ம் தேதி புனலூர் அரசு கருவூலத்திலிருந்து அச்சன்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை, தென்காசி, பண்பொழி, மேக்கரை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அன்று மாலை 2 மணிக்கு தென்காசி காசிவிசுவநாதர் கோயில் முன்பு திருஆபரணப் பெட்டிக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு ஏற்பாடுகளை திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.குருசாமி நாடார், அரிகரன், செயலாளர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் தங்கவேல் ஆச்சாரி, துணை செயலாளர்கள் மணி, சுப்புராஜ், ஐயப்ப சேவா சங்க தலைவர் மாரிமுத்து, கவுரவ தலைவர் ராமன், முருகன், தமிழ்சாமி, திருமலைக்குமாரசாமி, அழகிரி, சுப்பிரமணியன், முத்துசாமி, திருநாவுக்கரசு மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !