இறந்த கோவில் பூசாரிக்கு ஜீவ சமாதி
நரசிங்கபுரம்: இறந்த பூசாரியை, அவர் முன்னரே வீட்டினுள் கட்டி வைத்திருந்த பகுதியில், ஜீவ சமாதி அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம், நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன், 75. இவரது மனைவி அலமேலு, 70. இவர்களது மகன் மணிகண்டன், 32. கடந்த, 30 ஆண்டுக்கும் மேலாக, நரசிங்கபுரம் முப்பெரும் தேவி பெரியநாயகி அம்மன் கோவிலில், கணேசன் பூசாரியாக இருந்து வந்தார். கோவில் அருகே உள்ள, தன் வீட்டில், ஓராண்டுக்கு முன், ஆறு அடி ஆழம், மூன்றடி அகலத்தில், குழி தோண்டி, நாற்புறமும் நான்கு அடி உயரத்தில் கான்கிரீட் சுவர் கட்டினார். ’நான் இறந்தபின், இந்த இடத்தில் தன்னை அமர்ந்த நிலையில் ஜீவசமாதியாக உடல் அடக்கம் செய்ய வேண்டும்’ என, உறவினர்கள், கிராம மக்களிடம் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்டில், கோவில் வளாகத்தில் வழுக்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினார். இந்நிலையில், கடந்த, 40 நாட்களாக, அம்மனை நினைத்து உண்ணா நோன்பு இருந்து வந்தார். பிரதோஷ நாளான நேற்று மதியம், 1:00 மணிக்கு, அவர் உயிரிழந்தார். இரவு, 9:30 மணிக்கு, குழி தோண்டிய இடத்தில், அவரது உடலை அமர்ந்த நிலையில் வைத்து, மூன்று மூட்டை உப்பு, ஒரு மூட்டை மஞ்சள் தூள், வில்வ இலைகள் போட்டு வழிபாடு செய்து, ஜீவசமாதி அமைத்தனர். திருநங்கையர், 200 பேர், சேலம், ஆத்தூர், விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட நிலையில், சிற்பி வரதராஜன் ஜீவசமாதி கட்டினார்.
அப்பகுதியினர் கூறியதாவது: கணேசன், நரசிங்கபுரத்தில், மூன்று தலை கொண்ட முப்பெரும் தேவி பெரியநாயகி அம்மன் கோவிலை கட்டி, வழிபாடு செய்தார். அதன் அருகே, நரசிம்மகாளியம்மன் சிலை வடிவமைத்தார். நடப்பாண்டு இறுதிக்குள், பிரதோஷ நாளில், தன் உயிர் போகும் என, பக்தர்களிடம் கூறியுள்ளார். அதன்படியே இறந்துள்ளார். இதையறிந்த மக்கள், திரண்டு வந்து பூசாரியின் உடலை வழிபாடு செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.