அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நல்லம்பள்ளி: அதியமான்கோட்டையில் உள்ள அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட அதியமான்கோட்டையில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை, தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 10:15 மணிக்கு, கோவில் கோபுர கலசத்துக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இவர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு, மண்டல பூஜை துவங்குகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.