சேலத்தில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
சேலம்: அனுமன் ஜெயந்தியையொட்டி, சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, காலை, 10:00 மணிக்கு, விசேஷ ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், நெய், இளநீர், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்து, 1,008 வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டது. தொடர்ந்து, குலசேகர ராமாநுஜதாஸரின் சொற்பொழிவு, விசேஷ திருவாராதனை, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல், முதல் அக்ரஹாரம், வரதராஜப் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு, அதிகாலை பூஜை, வெட்டி வேர் அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. மஹா ஹோமம் சேலம், அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமர் கோவிலில் உள்ள, மணிகட்டிய ஆஞ்சநேயருக்கு, பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம், தேன், பால், தயிர், நெய் உள்ளிட்ட அபிஷேகம், 108 வாழை பழங்களுடன் மஹா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பால்குட ஊர்வலம், பால் அபி?ஷகம், திருமஞ்சனம் நடந்தது. பின், புதிய வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, 1,008 மிளகு வடை மாலை சாத்துபடி செய்து, மஹா தீபாராதனை நடந்தது. சேலம், ரெட்டியூரில் உள்ள, சின்மய கைவல்யா ஆஞ்சநேயர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, ஆஞ்சநேயருக்கு, 2,008 வடைகளால் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.