உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி விழா காஞ்சியில் கோலாகலம்

அனுமன் ஜெயந்தி விழா காஞ்சியில் கோலாகலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று விமரிசையாக நடந்தது. மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையுடன் கூடிய மூல நட்சத்திர நாள், அனுமன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அனுமன் ஜெயந்தி விழா, மாவட்டம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம், 18 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மஹா அபிஷேகமும்,11:00 மணிக்கு, தீப ஆராதனையும் நடந்தது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், கோட்டைவாயில் வீர ஆஞ்சநேயர் கோவிலில், மூலவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிங்கபெருமாள் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மாகாண்யம் கிராமத்தில், கன்யாகுமரி ஸ்ரீ ஜய அனுமன் சன்னதி உள்ளது. இங்கு, 24 அடி உயரத்தில் வீற்றுள்ள, கன்யாகுமரி ஸ்ரீ ஜய அனுமனுக்கு மூல மந்திர ஹோமம், சுந்தர காண்ட பாராயணம்பூர்த்தி, சஹஸ்ர நாம அர்ச்சனை, தீபாராதனை, காலையில் நடந்தது.மதுராந்தகம், பவர் ஸ்டேஷன் சாலை, சூரக்குட்டை லஷ்மி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள், 108 பால்குடங்களைச் சுமந்து, அபிஷேக ஆராதனை நடத்தினர்.

திருக்கழுக்குன்றம்: ருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம், சூராடிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், விஷேச திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவருக்கு வடை மாலை சாற்றப்பட்டது.திருப்போரூர், கேளம்பாக்கம் உட்பட, மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !