பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
இன்று (டிச.,19) விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று டிச.19, காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 2020 டிச.20 வரை இந்த ராசியில் இருப்பார்.
காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர். திருநள்ளார் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. திருநள்ளாரில் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. இதில் காலை முதல் நளம் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு சனிபகவானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது.
நன்மை பெறும் ராசிகள்: கடகம், துலாம், கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்
பரிகார ராசிகள்: ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்.