சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறில் கோலாகலம்
ADDED :2884 days ago
காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள திருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனி பெயர்ச்சி விழா, நேற்று விமரிசையாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், நேற்று முன்தினம் முதல், திருநள்ளாறில் குவிந்தனர். இரவு முதல், நளன் குளத்தில் நீராடி, சனி பகவானை தரிசனம் செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நீராடினர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சனி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. காலை, 10:01 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு, சனி பகவான் இடம் பெயர்ந்தார். அப்போது, அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.