பழநி சண்முகநதியில் உவ்வே.. நீராடும் பக்தர்களுக்கு ஆபத்து
பழநி: பழநி முருகன்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும், சண்முகநதி பராமரிப்பு இல்லாமல், கழிவுநீர், குப்பையால் மெல்ல மெல்ல அடையாளத்தை இழந்து பாழாகி வருகிறது. பழநி முருகன் மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பழமையான புனித சண்முகநதியில் நீராடி காவடிஎடுத்தும், அலகுகுத்தி மலைக்கு செல்கின்றனர். மேலும் பழநிநகர், கிராமப்புறங்களில் நடைபெறும் திருவிழாக்களில் இந்தநதியின் நீர்கொண்டு சுவாமி அபிஷேகம் செய்வதை தொன்றுதொட்டு மக்கள் கடைபிடித்துவருகின்றனர். 10 ஆயிரம் எக்டர் பரப்பளவிற்கு பாசனமும், 20க்கு மேற்பட்ட கிராமப்புற குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக சண்முகநதி விளங்குகிறது.
இத்தகைய பெருமையும், சிறப்பும் வாய்ந்த சண்முகநதியில் போதிய பாரமரிப்பு இல்லாததால், ஏராளமான அமலை செடிகள், பாசிகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் குளிக்கும்பகுதியில் பக்தர்கள் விட்டுசெல்லும் பிளாஸ்டிக் பை, டப்பா, துணிமணிகள் என குப்பை நிறைய உள்ளது. இவற்றால் ஆற்றிலுள்ள தண்ணீர் மாசுபடிந்து அசுத்தமாகியுள்ளது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியின் இருபுறங்களில் செடி,கொடிகள், முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மறைமுகமாக மணல் திருட்டும் நடக்கிறது. தைப்பூசவிழாவுக்குள் சண்முகநதியை பராமரித்து பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமித்துள்ள பாசிகள், அமலை செடிகள், குப்பையை அகற்ற பொதுபணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.