உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று தை அமாவாசை.. முன்னோருக்கு நன்றி சொல்ல மறக்காதீங்க!

இன்று தை அமாவாசை.. முன்னோருக்கு நன்றி சொல்ல மறக்காதீங்க!

சூரியன் வானில் சஞ்சரிப்பதன் அடிப்படையில், தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். இதில் மகர ராசியில் சூரியனுடன், சந்திரன் இணையும் நாளான தை அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குரியது. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி முன்னோரை நன்றியுடன் வழிபட, அவர்களின் ஆசி உண்டாகும்.

தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் பிதுர் காரகர் என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் மாதுர் காரகர் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை தர வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த புத்தி, உற்சாகம் அளிக்க வல்லவர் சந்திரன். இருவரும் இணையும் அமாவாசை நாளில் மறைந்த முன்னோர், பெற்றோரை வழிபடுவது பிள்ளைகளின் கடமையாகும். இது குறித்து ராமாயணம் சொல்வதை கேளுங்கள். குழந்தைபேறு அடைய விரும்பிய தசரதர், புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கரின் தலைமையில் நடத்தினார். யாகத்தின் பயனாக வந்த தெய்வீக பாயாசத்தை மனைவியரான கோசலை, கைகேயி பெற்றனர். இருவரும் தங்களின் பங்கு போக, மீதியை மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு கொடுத்தனர். அதனால், கோசலைக்கு ராமன், கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர்.

இவர்களின் பிறப்புக்கான காரணத்தை வேறு விதமாகவும் சொல்வதுண்டு. ஒரு பிள்ளை பெற்றால், அவன் பிதுர் தர்ப்பணத்தை புனித தலமான கயாவில் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்ததாம். கயாவில் பிதுர்க்கடன் செய்வது சிறப்பு என்பதால், ஒருவன் இல்லாவிட்டால் வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம் இடுவான் என அவர் நினைத்தார். அதனால் நான்கு பிள்ளைகள் இருக்கட்டும் என முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

இதன் மூலம் ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் இருந்ததையும், ஒரு மகன் விட்டாலும் இன்னொரு மகனாவது பிதுர்க்கடன் அவசியம் செய்ய வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது. தசரதருக்கு அந்திமக்கிரியை என்னும் இறுதி சடங்கு செய்தது நான்காவது மகன் சத்ருக்கனனே. ராமர், லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தந்தைக்கு இறுதிக்கடன் செய்ய முடியாமல் போனது. அயோத்தி மன்னராக ராமர் பட்டம் சூட்டிய பிறகு, கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது. தை அமாவாசையான இன்று தீர்த்தக்கரைகளில் நீராடி, மறைந்த முன்னோர், பெற்றோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காகத்திற்கு உணவு அளிப்பது, பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பது, அன்னம், ஆடை தானம் செய்வது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !