உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோர்ப்பண்ணை கிராமத்தில் சப்த கன்னியர் பொங்கல்

மோர்ப்பண்ணை கிராமத்தில் சப்த கன்னியர் பொங்கல்

ராமநாதபுரம்: மீன் கொடுத்து வாழ வைக்கும் கடல் அன்னைக்கு மீனவர்கள் நன்றி செலுத்தும் பாரம்பரிய சப்த கன்னியர் பொங்கல் திருவிழா, ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. ஏழு கன்னியர் எனப்படும் சப்த கன்னியர் வழிபாடு உழவுத் தொழில் செழிக்க, செல்வம் பெருக, குழந்தைகள் நோயின்றி வளர, தொழில் சிறக்க தொன்று தொட்டு தமிழகத்தில் நடத்தப்படும் வழிபாட்டு முறையாகும்.

தங்களை வாழ வைக்கும்கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில், ஏழு சிறுமியரைக் கொண்டு பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடலை வழிபடுகின்றனர், ராமநாதபுரத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்ரகாளி கோயிலை வழிபடும் கடையர் எனப்படும் மீனவர் சமுதாயத்தினர், ஒவ்வொரு ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுள்ள 7 சிறுமியரை தேர்வு செய்கின்றனர். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஜெயஸ்ரீ, சானியா மிஸ்ரா, சமயகிருத்திகா, அஜேதா, ஹரிணி, சமயராகவி, நிதி ஆகியோருக்கு சிறப்பு மரியாதை செய்து, ரணபத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்தனர். பின், மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு கரக செம்புகளோடு, ஏழு வாழை இலைகளில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து , தென்னம்பாளையில் செய்யப்பட்ட சிறிய பாய்மரப்படகில், பூஜை பொருட்களோடு, இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றி திரியிட்டு விளக்கு ஏற்றினர். இந்த தென்னம்பாளை படகுடன் ஊர் தலைவர்முன் செல்ல சப்த கன்னியர்கரக செம்பை தலையில் சுமந்து, மேளதாளத்துடன் கடலை நோக்கி சென்றனர். கழுத்தளவு தண்ணீரில் சென்றதும், பாய்மர படகை கடலில் விட்டனர். கரக செம்பில் உள்ள மஞ்சள் கலந்த பாலை கங்கா தேவியான கடலில் ஊற்றி வழிபட்டனர். கிராமத் தலைவர் வெள்ளி கருப்பு, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, சமூக ஆர்வலர் துரைபாலன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !