உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை : ராமேஸ்வரத்தில் திரண்ட பக்தர்கள்

தை அமாவாசை : ராமேஸ்வரத்தில் திரண்ட பக்தர்கள்

ராமேஸ்வரம்: தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சுருளி அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். தை, ஆடி மற்றும் புரட்டாசி (மகாளய) அமாவாசை நாட்கள் மிக முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ராமேஸ்வரம்: தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி,பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். பின் கோயிலுக்குள் உள்ள 16 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.

சுருளி அருவி: தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் வரத்துவங்கினர். அருவியில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் குளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.குளித்து முடித்தபின் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். கம்பம் ரேஞ்சர் தினேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கன்னியாகுமரி: நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கூடினர். கடலில் குளித்து ஈரத்துணியுடன் தர்ப்பணம் செய்தனர். முன்னோர்களுக்கான படையலை அவர்கள் கடலில் போட்டு குளித்து கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோயிலில் வணங்கினர்.பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் வழியாக சென்று தேவியை வழிபட்டனர். இந்த கிழக்கு வாசல் தை அமாவாசை, ஆடி அமாவாசை, விஜயதசமி, பரிவேட்டை, திருக்கார்த்திகை, ஆகிய 5 நாட்களில் மட்டுமே திறக்கப்படும். கடற்கரையிலும் கோயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சதுரகிரி மலை: சதுரகிரி மலையில் நேற்று நடந்த தை அமாவாசை விழாவில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.இங்கு சுயம்புவாக எழுந்தருளிய சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன. விழாவிற்காக கடந்த இரு நாட்களுக்கு முன் மலைப்பாதை திறக்கப்பட்டது. முதல்நாளில் கோயிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தன. இரண்டாம்நாள் மாலையில் சிவராத்திரி வழிபாடு நடந்தது.மூன்றாம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான தை அமாவாசை வழிபாடு நடந்தது. சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு ஊர்களிலிருந்தும் மலையடிவாரமான தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !