உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் ஆன்மிக எழுச்சி விழா:சாமளாபுரத்தில் கோலாகலம்

ஆண்டாள் ஆன்மிக எழுச்சி விழா:சாமளாபுரத்தில் கோலாகலம்

திருப்பூர் :ஸ்ரீஆண்டாள் குறித்து அவதுாறு பேசிய வைரமுத்துவை கண்டித்தும், ஆண்டாளின் மகிமையை விளக்கும் வகையிலும், சாமளாபுரத்தில் ஆண்டாள் ஆன்மிக எழுச்சி விழா நேற்று நடந்தது.தமிழ் வளர்த்த அன்னை ஆண்டாள் குறித்து, வைரமுத்து தவறான கருத்தை கூறியதால், தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில், பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சாமளாபுரம் பக்தர்கள், ஆண்டாளின் மகிமை வெளிப்படுத்தும் வகையில், விழா நடத்த முடிவு செய்தனர். சாமளாபுரம், தில்லைநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில், காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டது. அதன்பின், ஆண்டாள் நாம சங்கீர்த்தனம், பஜனை மற்றும் ஆன்மிக நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மாலை, 6:00 மணிக்கு, சோழீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ற பக்தர்கள், திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி, பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அங்கு, பெருமாளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டாள் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும், வேத பாராணயமும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில், சாமளாபுரம், சோமனுார் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, ஆண்டாளை பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !