உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது
ADDED :2824 days ago
காஞ்சிபுரம் : உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரத்தில், வைணவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக உள்ளது. ஆண்டு தோறும், தை மாத பிரம்மோற்சவம், 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இக்கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் இத்திருவிழா துவங்கியது. முதல் நாள் காலை உலகளந்த பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மூன்றாம் நாள் கருடசேவையும், ஏழாம் நாள், திருத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. 31ம் தேதியுடன், இக்கோவில் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.