உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் இன்று தெப்ப உற்சவம்

திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் இன்று தெப்ப உற்சவம்

திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி கோவிலில், தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது. சென்னை, திருவொற்றியூரில், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை மாதத்தில், கோவில் வளாகத்தின் வெளியே உள்ள, ஆதிஷேச குளத்தில், தெப்ப உற்சவம் நடக்கும். கடந்த, 2016ல், 60 சதவீதம் அளவிற்கு குளம் நிரம்பியதால், 10 ஆண்டுகளுக்கு பின், தெப்ப உற்சவம், வெகு சிறப்பாக நடைபெற்றது. 2017ல், குளத்தில் தண்ணீர் இல்லாததால், தெப்ப உற்சவம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு, டிசம்பரில் கொட்டித் தீர்த்த மழைக்கும், குளம் மூன்று படிக்கட்டு அளவிற்கே நிரம்பியிருந்தது. குளத்தில், முழங்கால் அளவுக்கு தற்போது தண்ணீர் உள்ளது.

இதில், தெப்போற்சவம் என்பது சாத்தியமில்லை. லாரியில் தண்ணீர் கொண்டு நிரப்புவதும் சாத்தியமில்லை. எனவே, கோவில் நிர்வாகம், நிலை தெப்ப உற்சவம் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தேங்கியிருக்கும் தண்ணீரில், படிகட்டின் ஓரமே, மேடை அமைக்கப்பட்டு, உற்சவ சிலைகளை அமர்த்தி, தெப்ப உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, மேடை அமைக்கும் பணியும் நடக்கிறது. இன்று காலை, தியாகராஜர் அபிஷேகமும், மாலை, 6:00 மணிக்கு, சந்தரசேகர் நிலை தெப்ப உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு, தியாகராஜர் மாடவீதி உற்சவமும் நடைபெறும். தெப்ப திருவிழாவிற்கு, திருவொற்றியூர் மட்டுமின்றி, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !