மதுரை மீனாட்சி கோயிலும் வெள்ளிக்கிழமை ‛தீ’யும்!
மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்றும் தீப்பிடித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளி அன்று காலை 11 மணிக்கு மடப்பள்ளியில் தீப்பிடித்துள்ளது. இதை ஊழியர்கள் அணைத்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் கசியாமல் அதிகாரிகள் ‛அமுக்கி’விட்டனர். அதற்கு பிறகாவது எச்சரிக்கையாக இருந்திருந்தால், நேற்று நடந்த விபத்தையும் தவிர்த்திருக்கலாம்.
கோவிலில் தீப்பிடித்த உடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ’கோயிலில் கடைகள் வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம்’ என இந்து அமைப்புகளும், பக்தர்களும் ஆவேசமாக குரல் எழுப்பினர். போலீசார் அவர்களை வெளியேற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். கோயில் நிர்வாகத்தை கண்டித்து பக்தர்கள் கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தக்கார் முத்து கண்ணன், கோயில் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தீயணைக்கும் பணியை துரித்தப்படுத்தினர்.