கொளாநல்லியில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி
கொடுமுடி: கொளாநல்லியில் மீனாட்சி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. கொடுமுடி, நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கருங்கரடு பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஸ்ரீனிவாசப்பெருமாள் மற்றும் மீனாட்சி உடனமர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. முன்னதாக பெருமாள் ஆலயத்தில் இருந்து மாப்பிளை அழைப்பு மற்றும் சீர்வரிசை எடுத்து வருதல், விசேஷச திருமஞ்சனம், மீனாட்சி சுந்தரேசருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, அங்குரார்பணம், சமர்ப்பணம், ஊஞ்சல் நிகழ்ச்சி, கன்னிகாதானம், திருமாங்கல்ய தாரணம், மகா தீபாராதனை, கோ பூஜை நடந்தது. இதில் கருங்கரடு, ஊஞ்சலூர், கொளாநல்லி பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.