உள்ளூரில் விரதம் முடிப்பதில் தவறில்லை:அய்யப்பா மிஷன் நிறுவனர் தகவல்!
சென்னை: அய்யப்ப பக்தர்கள், தங்கள் ஊரில் உள்ள அய்யப்பன் கோவிலில் விரதம் முடிக்கலாம் என, அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பா மிஷனின் நிறுவனர் ராஜமங்கலம் கூறினார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களால், கேரள அரசுக்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இம்முறை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், தமிழக அய்யப்ப பக்தர்கள், கேரளாவைச் சேர்ந்த சில வன்முறையாளர்களால் தாக்கப்படுவதுடன், அவர்களின் வாகனங்களும், சேதப்படுத்தப் படுகின்றன. அம்மாநில அரசுக்கு வருவாயையும் அளித்துவிட்டு, அவர்களிடம் அடிவாங்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், அவரவர் ஊரில் உள்ள அய்யப்பன் கோவிலில், தங்கள் விரதத்தை முடிக்கலாம். இதை, சபரிமலைக்கு சென்று விரதம் முடிக்கும் சம்பிரதாய நெறிமுறைக்கு எதிராகக் கருத வேண்டியதில்லை.கேரளாவில், தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால், அம்மாநிலத்திலிருந்து பழனிக்கு வரும் முருக பக்தர்கள், ஒருவித அச்ச உணர்வுடன் வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலைக்கு, கேரள அரசு தான் காரணம்.இவ்வாறு ராஜமங்கலம் கூறினார்.