திருவண்ணாமலை அம்மன் தேரை பைபர் கிளாஸ் தகடு கொண்டு மூட பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அம்மன் தேர் பாதுகாப்புக்காக பக்தர் வழங்கிய பைபர் கிளாஸ் தகடு பொருத்தப்படாமல் உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், ஏழாம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்ரவர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என, தனித்தனி தேரில் வீதி உலா வருவர். தேர்த்திருவிழா முடிந்ததும், மழை, வெயிலால் தேர் சேதமடையாமல் இருக்க இரும்பு தகடு கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தீப திருவிழா முடிந்ததும், வெளியூரிலிருந்து மற்ற நாட்களில் வரும் பக்தர்கள், தேரை பார்க்க முடியாத நிலை ஏற்படுவதால், பைபர் கிளாஸ் தகட்டால் மூட பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த, 2015ல், 10.50 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய பைபர் கிளாஸ் கொண்டு, உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வரும் மகாரதம் மூடப்பட்டது. கடந்த ஆண்டு நவ., மாதம், அம்மன் தேரை பாதுகாப்பாக மூடி வைக்க வசதியாக, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான பைபர் கிளாஸ் தகடை, பக்தர் ஒருவர் நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் வாங்கி கொடுத்தார். தற்போது, தீப திருவிழா முடிந்ததும் அனைத்து தேர்களும் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ள நிலையில், பக்தர் நன்கொடையாக வாங்கி கொடுத்த பைபர் கிளாஸ் தகட்டை அம்மன் தேரில் பொருத்தாமல், பழையபடி இரும்பு தகட்டை கொண்டே மூடி வைத்துள்ளனர். இதனால், பக்தர் வாங்கி கொடுத்த பைபர் கண்ணாடி தகடு சேதமடைந்து வருகிறது. எனவே, இந்த தகட்டை கொண்டு மூட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.