மேல்மலையனூரில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா நாளை (14 தேதி)கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அன்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜையும், இரவு கொடியேற்றமும், சக்தி கரக ஊர்வலமும் நடக்க உள்ளது. இரண்டாம் நாள் விழாவாக 15ம் தேதி காலை 11 மணிக்கு மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானகொள்ளைநிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில் பிரம்ம காபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சியை பாரம்பரிய முறைப்படி செய்யவுள்ளனர். தொடர்ந்து 16 மற்றும் 17ம் தேதிகளில் தங்க நிற மரபல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 18ம் தேதி மாலை 5:00 மணிக்கு தீமிதி விழாவும் நடக்கிறது. மேலும், 19 ம் தேதி தங்க நிற மர பல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 20ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல், மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், மேலாளர்மணி, சதீஷ், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தயாராகும் தேர்: மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக் கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் பார்வதி தேவியில் அம்சமான அங்காளம்மனின் கோபத்தை தணிக்க தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக இருந்து விழா எடுக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் வடிவமைக்கின்றனர். தேருக்கான சக்கரம், பீடம், கலசம் ஆகியன நிலையாக செய்து வைத்துள்ளனர். மற்ற பாகங்களை பச்சை மரங்களை கொண்டு புதிதாக தேர் வடிவமைக்கின்றனர். இந்த ஆண்டும் பச்சை மரங்களை கொண்டு தேர்கட்டும் பணி பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது.