உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கல்யாண உற்சவம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கல்யாண உற்சவம்

திருப்போரூர்: திருப்போரூரில், கந்தசுவாமி பெருமான், வள்ளியை மணம் முடித்த, திருக்கல்யாண உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்றுவரும் விழாவில், கடந்த நாட்களில், ரதோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

காலை, 7:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் கந்தசுவாமி பெருமான், உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கோவில் சிவாச்சாரியார்களால், திருக்கல்யாணத்திற்கான யாக பூஜைகள் நடைபெற்றன. பின், 8:35 மணியளவில், பக்தர்களின், ’அரோகரா’ கோஷத்தின் மத்தியில், கந்தசுவாமி பெருமான், வள்ளியை மணம் முடிக்கும் வைபவம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அதை தொடர்ந்து, சுவாமியின் திருக்கல்யாண கோலத்தைக் காண மாடவீதிகளில் காத்திருந்த உள்ளூர் வாசிகள் பலர், சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். கடந்த, 13 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா, இத்திருக்கல்யாண உற்சவத்துடன், இனிதே நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !