வினைகள் தீர்க்கும் தைப்பூச வேல் வழிபாடு!
‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்’ என்பது ஆன்றோர் வாக்கு. வந்த வினைகளும் வருகின்ற வல்வினைகளும் நீங்கிட வேலாயுதத்தை வழிபட வேண்டும் என்பது அவர்களது அறிவுரை. அவ்வகையில் பெரியோர்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் வேல் வழிபாட்டின் உன்னதத்தை அறிந்து போற்றும் விதம், ஈரோடு ‘தமிழ்க்கடவுள் அறக்கட்டளை ’ அமைப்பின் சார்ப்பில் தைப்பூச வேல்வழிபாடு நடைபெறவுள்ளது. 4.2.18 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள முன்னாள் மாணவர் கலையரங்கத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
காலை 9 முதல் மதியம் 2 மணி வரையிலும் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், ஆன்மிக எழுத்தாளரும் பேச்சாளருமான வலைய பேட்டை ரா. கிருஷ்ணன் முன்னின்று வேல்மாறல் பாராயணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து தைப்பூச வேல் வழிபாடு சிறப்பாக நடைபெறவுள்ளது. குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு உட்பட ஆன்மிக அமைப்பினரும் அன்பர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். அன்பர்கள் அற்புதமான இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட்டு, முருகப்பெருமானின் திருவருளையும், எண்ணிறைந்த சித்தர்பெருமக்களின் அருளாசியையும் பெற்றுச் செல்லலாம்.