உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டையொட்டி திருமலையில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டையொட்டி திருமலையில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

நகரி : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டில் சாமி தரிசனம் செய்ய நாடெங்கிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று முன்தினம் (சனியன்று) காலை முதல் திருமலை எங்கும் குவிந்திருந்தனர்.

கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் புயல் மழை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. வார விடுமுறை, புத்தாண்டு பிறப்பையொட்டி திருமலைக்கு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிறு தினங்களில் வழக்கம் போல் அதிகரித்துவிட்டது.

திருமலை கோவிலில் புத்தாண்டு தரிசனத்தையொட்டி, இரவு 12 மணிக்கு திருப்பாவை சேவைக்குப் பின், நேற்று அதிகாலை 2 மணி முதல் வி.ஐ.பி.,க்கள் அனுமதிக்கப்பட்டனர். 4 மணி முதல் இலவச கியூவில் செல்லும் பக்தர்கள், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் 100 ரூபாய், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனைவரும் நேற்று (ஞாயிறன்று) நள்ளிரவு வரை தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக, தொலை தூர (மகாலகு) தரிசனம் அமல்படுத்தப்பட்டது.

பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி லட்டு பிரசாதம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதான வளாகத்தில் தொடர்ந்து இலவச உணவு வழங்கப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தையொட்டி இன்று திங்கட்கிழமையும் கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !