திருவள்ளூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. இதில், நந்தி பகவானுக்கு பால், இளநீர், தயிர், தேன், விபூதி உள்ளிட்ட பல வகையான அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் உட்பிரகாரம் வலம் வந்தார்.பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் எழுந்தருளி உள்ள புஷ்பவனேஸ்வரர், பெரியகுப்பம், ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரர் கோவில், காக்களூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை பாதாள லிங்கேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.