ஓசூர் கோவில் திருவிழாவில் பெண்களுக்கு சாட்டையடி: வினோத நேர்த்திக் கடன்
ஓசூர்: ஓசூர் கோவில் திருவிழாவில், புத்தாண்டையொட்டி பேய், பிசாசை விரட்ட பெண்களுக்கு பூசாரி சாட்டையடி கொடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில், வேலூர் மாவட்டம், திருப்பத்தார் பகுதியை சேர்ந்த குறும்பா, குறும்பன்ஸ் இன மக்கள் பரவலாக வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும், ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி திருப்பத்தூர், வேலம்பட்டி கிராமத்தில் உள்ள வீரபத்திரசாமி ஸ்வாமிக்கு விரதம் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்து திருவிழா கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டையொட்டி, திருப்பத்தூரில் இருந்து வீரபத்திரசாமி, சித்தப்பா, பத்திராயன், லிங்கம்மா ஆகிய ஸ்வாமி சிலைகளை, குறும்பா, குறும்பன்ஸ் இன மக்கள் எடுத்து வந்து ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்புமாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு வைத்தனர். நேற்று காலை முதல் மதியம் வரை ஸ்வாமி சிலைகளுக்கு, புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள், ஹோமம் நடந்தது. பக்தர்கள் குடும்பத்தோடு வந்து, பூஜை செய்து வழிப்பட்டனர். மதியம் குறும்பா, குறும்பன்ஸ் இளைஞர்கள், தங்களுடைய வீர விளையாட்டான வாள் சேவையாட்டம் விளையாடினர். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் ஆவேசமாக தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். இதையடுத்து, பெண்களை பேய், பிசாசுகள் பிடிக்காமல் இருக்க அருள்வேண்டி பெண் பக்தர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் நூதன வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பெண் பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து முழங்கால் போட்டு வலது கையை உயர்த்தி நின்றனர். அப்போது, கோவில் பூசாரி பூஜை மந்திரங்களை கூறியவாறு, அந்த பெண்கள் மீது சாட்டையடி கொடுத்தார். சாட்டையடி வாங்கி நூதனமான முறையில் நேர்த்தி கடன் நிறைவேற்றினர். ஆண் பக்தர்களும் நோய், வறுமை மற்றும் விபத்து ஏற்படாமல் இருக்க சாட்டையடி வாங்கினர். இந்த நூதன நேர்த்தி கடன் நிகழ்ச்சிகளை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.