பொன்வரதராஜ பெருமாள் கோவில் ஜன., 5ல் சொர்க்கவாசல் திறப்பு
ராசிபுரம்: "வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், ஜனவரி 5ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா, வெகுவிமரிசையாக நடக்கிறது. விழாவையொட்டி, ராசிபுரம் ஜனகல்யாண் நிறுவனத்தினர் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா (சொர்க்கவாசல் திறப்பு) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, ஜனவரி 4ம் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மேலும், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஜனவரி 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் பரமபத வாசல் வழியாக ஸ்வாமி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வருதராஜ பெருமாளை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக செல்கின்றனர். நிகழ்ச்சியில், ராசிபுரம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, மல்லூர், அத்தனூர், திருமலைப்பட்டி, சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்வர்.விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, ராசிபுரம் ஜனக்கல்யாண் சார்பில், பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.