உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி

மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி கிராமத்தில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் மீது நடந்து, பூசாரி ஆசி வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, சிந்தகம்பள்ளி கிராமத்தில், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, கடந்த, 18ல், மாரியம்மன் கோவிலுக்கு, வேப்பம்பத்திரி, வெல்லம் வைக்கும் நிகழ்ச்சியும், நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டத்துடன், இரவு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இரண்டாம் நாளான, நேற்று அதிகாலை, முத்துமாரியம்மன் சுவாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் பூசாரி ரவி, கரகத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றார். அண்ணா நகரில் உள்ள, காளிக்கோவிலில் இருந்து, முத்துமாரியம்மன் கோவில் வரை, சாலையில் ஈரத்துணியுடன், பக்தர்கள் படுத்துக்கொண்டனர். அவர்கள் மீது, கரகம் எடுத்து வந்த பூசாரி, நடந்து சென்று, ஆசி வழங்கினார். கோவில் எதிரில் உள்ள குண்டத்தில், கரகத்துடன் பூசாரி இறங்கிய பின், தொடர்ந்து பக்தர்களும் குண்டம் இறங்கினர். பேய் விரட்டும் நிகழ்ச்சியில், கலந்து கொண்டவர்கள் மீது, பூசாரி சாட்டையால் அடித்தார். கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !