உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சென்னிமலை: சென்னிமலை அருகே, நஞ்சுண்டேஸ்வரர் கோவில், பங்குனி விழாவில், 3 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில், புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது.

மிக பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திங்கள்கிழமைகளில், விசேஷ பூஜை நடக்கிறது. புரட்டாசி சனியில் பெருமாளுக்கு நடப்பதுபோல், பங்குனி மாத திங்கள்கிழமையில், விழா நடப்பது வழக்கமாக உள்ளது. சென்னிமலை மட்டுமின்றி, காங்கேயம், திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி பகுதி மக்களும், கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது. சுயம்பு லிங்க ஈஸ்வரை, தரிசிக்க பக்தர்கள் குவிகின்றனர். பங்குனி முதல் திங்கள்கிழமையான நேற்று, கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை, 2:00 மணிக்கு, தலைமை குருக்கள் கண்ணன் தலைமையில், சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தினர். மூன்று மணி நேரத்துக்கும் மேல், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் பிரசாதமான வெள்ளரிகாய்களை வாங்கி சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னிமலை, ஊத்துக்குளியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !