குற்றாலநாதர் கோயிலில் இன்று திருவாதிரை திருவிழா தேரோட்டம்!
குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் இன்று (3ம் தேதி) திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் திருவாதிரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, இரவு தாண்டவ தீபாராதனை, சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடந்தது. விழாவின் ஐந்தாம் நாளான இன்று (3ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. காலையில் நடராஜமூர்த்தி பெரிய தேரில் எழுந்தருள்கிறார். இத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதனையடுத்து குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை, விநாயகர், முருகன் தேர்கள் அடுத்தடுத்து வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டம் முடிந்ததும் பஞ்சமூர்த்திகள் செங்குந்தர் மடத்தில் இளைப்பாறுகின்றனர். மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவின் எட்டாம் நாளான வரும் 6ம் தேதி நடராஜமூர்த்திக்கு சித்ரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. தேரோட்டம் நடக்கும் ரதவீதியில் ஆங்காங்கே சேறும், சகதியும் நிறைந்ததாக இருக்கிறது. தேரோட்டத்திற்கு இது பெரிதும் இடையூறாக இருக்கும். எனவே தேரோட்டம் துவங்குவதற்கு முன் சேறு, சகதியை அகற்றி விட்டு அப்பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள குற்றாலம் டவுன் பஞ்.,நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.