உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கு உண்மையாய் இருங்கள்

கடவுளுக்கு உண்மையாய் இருங்கள்

“நீ விசுவாசமும் மனசாட்சியும்  உடையவனாயிரு! இந்த  நன்மனச்சாட்சியை சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்,” என்ற பைபிள் வசனத்தை, திரும்பத் திரும்ப ஒருவர் தன் மனதுக்குள் சொல்லிய படியே வந்து கொண்டிருந்தார். வழியில், ரயில் பாதையைக் கடக்க மேலே இருந்த பாலத்தில் ஏறினார். அந்த ஸ்டேஷன் மூலையில், பழைய ரயில் பெட்டிகள் உடைந்து கிடப்பதைப் பார்த்தார். “இந்த பெட்டிகள் புதிதாக இருந்த போது எத்தனை பேரை ஏற்றி எத்தனை ஊர்களுக்கு போயிருக்கிறது... அன்று ஓடிக்கொண்டிருந்த இந்த பெட்டிகள் இன்று ஆகாதவைகளாய் போய்விட்டதே!” என்று அவருக்கு வருத்தம்.  அப்போது கர்த்தர் அவர் முன் தோன்றி, “மகனே! இந்த ரயில் பெட்டிகள் உபயோகப் படாமல் போனது போல, நிறைய மக்களும் இன்று பயன்படாமல் போய் விட்டனர். அவர்களை நான் நல்லபடியாகத்தான் பூமிக்கு அனுப்பினேன்.  இப்போதோ, தடம் புரண்டு போன இந்த ரயில் பெட்டிகளைப் போல பயனற்றுப் போயினர். சிலரை பணம் வீழ்த்தியது. வேறு  சிலரை ஆசைகள் வீழ்த்தின. இன்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் தேவநாமத்திற்கு இழுக்காக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்,” என்றார்.

உடனே பரவசம் கொண்ட பக்தர், “ஆண்டவரே! கடைசி மூச்சு வரை உமக்காக ஓடிக்கொண்டே இருக்க உதவி செய்யும். என்னைக் காத்துக் கொள்ளும்.  உம் வழிகளிலே உத்தமமாய் ஓட அனுக்கிரகம் செய்யும்,” என பிரார்த்தித்தார். தேவ பிள்ளைகளான நாம், நம் மனசாட்சியை சேதப்படுத்தாமல், கர்த்தருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவர் நமது பாவங்களை களைய, சிந்திய  ரத்தத்திற்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உயிர்த்துடிப்பு இருக்கும் வரை உன்னதமான கடவுளுக்காக உண்மையும், உத்தமுமாய் உழைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !