பூதபுரீஸ்வரர் திருத்தேர் விழா: ஸ்ரீபெரும்புதூரில் கோலாகலம்
ஸ்ரீபெரும்புதுார்: பூதபுரீஸ்வரர் கோவில் திருத்தேர் விழாவில், ஏராள மான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து, தேர் இழுத்தனர். ஸ்ரீபெரும்புதுாரில், பழமை வாய்ந்த, சவுந்தர வள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவிலில், 21ல், பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஏழாவது நாளான நேற்று, திருத்தேர் விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன், காலை, 8:00 மணிக்கு தேர் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். காந்தி சாலை, செட்டி தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, தேரடி சாலை வழியாக சென்ற தேருக்கு, திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர். வாண வேடிக்கை, சிவ வாத்தியம், நாதஸ்வரம், பேன்ட் வாத்தியங்கள் முழங்க தேர் சென்றது. சிறார்கள் பக்தி பெருக்குடன், சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன், பிரம்மா உள்ளிட்ட கடவுள்களின் வேடமிட்டுஇருந்தனர்.