சென்னை மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, அருள் பெற்றனர்.
சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இக்கோவிலின் பங்குனிப் பெருவிழா, மார்ச், 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், 3ம் நாள், உற்சவர் சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனிப் பெருவிழாவின், 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியின் அருளைப் பெற்றனர். சென்னை மல்லீஸ்வரர் கோவிலிலும், நேற்று தேர் திருவிழா நடந்தது. பங்குனி பெருவிழாவில், இன்று பரிவேட்டை விழா நடக்கிறது.