சென்னிமலை முருகன் பங்குனி உத்திரவிழா: சேவல் கொடியேற்றி துவக்கம்
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நேற்று சேவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த நாட்டாமை, பெரியதனக்காரர்கள், பெரியவர்கள் முன் நின்று, மலை மேல் உள்ள கொடி மரத்தில், சேவல் கொடியை ஏற்றி, நேற்று பங்குனி உத்திர விழாவை துவக்கி வைத்தனர். கொடியேற்றத்திற்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தலைமைக்குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்ய, சேவல் கொடியை ஏற்றி விழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். இசை வேளாளர் சமூகத்தினர் முருகதாஸ், சுகுமார் ரவி, சவுந்திரராஜன் உட்பட பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்று இரவு நடக்கிறது. தேரோட்டம் நாளை காலை, 6:00 மணிக்கு நடக்கிறது, மாலை, 5:00 மணிக்கு தேர் நிலை சேரும். 31 காலை பரிவேட்டை, இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. ஏப்., 1ல் காலை மகாதரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் அருள்குமார் தலைமையில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.