ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்றிரவு மார்ச் 30ல் கோலாகலமாக நடந்தது.நேற்று மார்ச் 30ல் காலை 10:00 மணிக்கு ஆண்டாள் கோயில் மரியாதையுடன் கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலிலில் இருந்து திருக்கல்யாண பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, திருமாங்கல்யம் ஆகியவை பெற்று கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் புறப்பாடு, வேதபிரான் பட்டர் தேங்காய் பெறுதல், பெரியாழ்வார் எழுந்தருளல் வைபவங்கள் நடந்தன. அதனையடுத்து ஆண்டாள் அங்க மணிகளுடன் புறப்பாடு, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஆடிப்பூர பந்தலில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். ஸ்ரீ வாரி பிரபு பட்டர் தலைமையில் திருமண வைபவங்கள் இரவு 7:25 மணிக்கு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், கோயில் செயல்அலுவலர் நாகராஜன், வேதபிரான் அனந்தராமன், முத்து பட்டர், சுதர்சன், மணியம் ஸ்ரீராம், கோபி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் திரளான பக்தர்கள் ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்தனர். ராஜா டி.எஸ்.பி., தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.