18ம் நூற்றாண்டு செப்பேடு பழநியில் கண்டுபிடிப்பு
பழநி: பழநியில் வேலாயுத சுவாமிமடத்திற்கு எழுதப்பட்ட 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழநியைச் சேர்ந்த வி.சிவக்குமார் வழங்கிய பழங்கால செப்பேடு ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். அதில் சாலிவாகன சகாப்தம் 1627ம் ஆண்டு (கி.பி.,1705) பார்த்திப ஆண்டு சித்திரை மாதம் செப்பேடு எழுதப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது: செப்பேட்டில் 139 வரிகள் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மன்னர் ரகுநாதசேதுபதி ஆட்சிகாலத்தில் அவரது மகன் ரணசிங்க தேவரவர்கள் கட்டளைப்படி மருதபிள்ளை எழுதிய மூல தாமிரபட்டயத்தின் நகல் தான் தற்போது கிடைத்துள்ள செப்பேடு ஆகும்.அரச கட்டளைசிவகங்கை மன்னர் முத்துவடுகர் மற்றும் அவரது மனைவி வேலு நாச்சியாருக்கு காரியகர்த்தாவாக இருந்த தாண்டவராயின் பிள்ளையின் கட்டளை மற்றும் உதவியுடன் திருப்பத்துார் பழனி ஆசாரி மகன் முத்தாண்டி என்பவர் எழுதியுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளைச் சேர்ந்த 77ஊர்கள், 36ஜாதியார்கள் ஒன்றுகூடி அரசக்கட்டளைப்படி பட்டயத்தை ஏற்படுத்தினர்.பழநி மலையில் கந்தபுராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தைச் சேர்ந்த ஏகாம்பர உடையாருக்கு மடம் ஒன்று கட்டிவைத்து பூஜை செய்வதற்காக, அரண்மனைவாசிகள் 5 பொன்னும், கிராமங்களில் உள்ளவர்கள் 6 பணமும் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.